தர்மபுரி மாவட்டத்தில் அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா-பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்


தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயான கொள்ளை திருவிழா

மகா சிவராத்திரியையொட்டி தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சக்தி கரகம் அழைத்தல், குண்ட பூஜை, தீமிதி விழா, பொங்கல் வைத்தல், கங்கை பூஜை, பால்குட ஊர்வலம் மற்றும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தாண்டவேஸ்வரர்-அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கல்யாண உற்சவம், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் முகவெட்டு ஊர்வலம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான நேற்று காலை ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மேளதாளங்கள் முழங்க பூத வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான புறப்படுதலும், தொடர்ந்து குமாரசாமிப்பேட்டை மயானத்தில் மயான கொள்ளை திருவிழாவும் நடைபெற்றது.

பேய் விரட்டுதல்

இந்த ஊர்வலத்தின் போது ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியவாறும், பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் சிலர் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து மயானத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சவுக்கால் அடித்து பேய் விரட்டும் நிகழ்வும் நடந்தது.

இரவு கண்ணாடி மின்விளக்கு ரதத்தில் பூ பல்லக்கு ஜோடனைகளுடன் பூத வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவீதிஉலா சென்றார். மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நள்ளிரவு அம்மனுக்கு பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது.

கொடியிறக்கம்

இன்று (செவ்வாய்க்கிழமை) பல்லக்கு உற்சவம் மற்றும் முன்பின் ஜோடனை அலங்காரத்தில் குதிரை ரதத்தில் அம்மன் திருவீதி உலாவும், நாளை (புதன்கிழமை) பிள்ளை பாவு ஊர்வலம், கும்ப பூஜை மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது.

விழாவையொட்டி பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

பச்சியம்மன் கோவில் மயானம்

தர்மபுரி எஸ்.வி. ரோட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் மேளதாளங்கள் முழங்க அம்மன் மயானம் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள பச்சையம்மன் கோவில் மயானத்தை சென்றடைந்தது.

அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் பூசாரியிடம் சவுக்கடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்கல்யாண உற்சவம்

தர்மபுரி அன்னசாகரம் நடுவீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழாவையொட்டி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மயான புறப்பாடும், தொடர்ந்து மயானத்தில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அ.பாப்பாரப்பட்டி அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் சாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று திருக்கல்யாண கோலத்தில் அம்மன் திருவீதி உலா, பிள்ளைப்பாவ் சுற்றுதல் நடைபெற்றது. பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மயானத்தில் சிறப்பு பூஜை நடந்தது.

பக்தர்கள் பரவசம்

பிக்கிலியில் உள்ள அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழாவையொட்டி பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் சிலர் சாமி வேடமணிந்து கோழி, ஆடுகளை கடித்து பரவசமடைந்தனர். அவர்கள் முன்பாக பக்தர்கள் தரையில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சாமி திருக்கல்யாணம், திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்காளம்மன் கோவில்களிலும் மகா சிவராத்திரியையொட்டி மயான கொள்ளை திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story