கோவில் காளை திடீர் சாவு
தோகைமலை அருகே கோவில் காளை திடீரென இறந்தது. இதையடுத்து கிராமமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கோவில் காளை சாவு
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே சின்னையம்பாளையம் ஊராட்சி ஈச்சம்பட்டி கிராம மக்கள் பசிபேரிநாயக்கர் மந்தையின் சலையத்எருது என்று அழைக்கப்படும் கோவில் காளை ஒன்றை கடந்த பல ஆண்டுகளாக வளர்த்து வந்தனர். இந்த காளை சுமார் 90-க்கும் மேற்பட்ட மாலை தாண்டும் போட்டிகளில் கலந்து கொண்டு, 50-க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று, தங்கம், வெள்ளி, கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்று கிராமமக்களுக்கு புகழை தேடி தந்தது. இதனால் இப்பகுதி மக்களிடையே காளை பாசத்துடனும் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் வயது முதிர்வு காரணமாக கடந்த ஒராண்டாக கோவில் காளை உடல் நலம் குன்றி காணப்பட்டது. இ்ந்தநிலையில் நேற்று காலை கோவில் காளை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராமமக்கள் ஒன்று கூடினர். பின்னர் காளைக்கு ஊர்வழக்கப்படி மஞ்சள் கதர் ஆடையை மற்றும் மாலை அணிவித்து, அலங்காரம் செய்தனர். பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பசிபேரிநாயக்கர் மந்தையில் வைத்தனர்.
உடல் அடக்கம்
மேலும், திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 14 மந்தையர்களும் வந்து இறந்த காளைக்கு புத்தாடை மற்றும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தனர். அதனை தொடர்ந்து கிராம பொதுமக்கள் அனைவரும் பாரம்பரியமிக்க தேவராட்டம், கும்மிபாடல், ஒப்பாரி, உருமி, தப்பாட்டம் மற்றும் வாணவேடிக்கையுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர். தொடர்ந்து ஊர்வலமாக காளை எடுத்து செல்லப்பட்டு குலவழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது. பல்வேறு பரிசுகளை பெற்று கிராமத்திற்குபெருமை சேர்த்த கோவில் காளை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.