கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம்
சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கபிஸ்தலம்;
சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழா
அறுபடை வீடுகளில் 4-ம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டுவிக்னேஸ்வர பூஜையுடன் காலை கொடியேற்றமும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் இரவு திருவீதி உலாவும் நடைபெற்றது. விழா நாட்களில் சுவாமி படிச்சட்டத்திலும் இரவு பல்வேறு வாகனங்களிலும் சாமி புறப்பாடு நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் நேற்று காலை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் சுவாமிமலையின் 4 வீதிகள் வழியாக சென்று மதியம் 12 மணி அளவில் கோவிலுக்கு மீண்டும் வந்தது.இரவு தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று கார்த்திகை தீபம் ஏற்றி திருவீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் உதவி ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு பணியில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.