தேரோட்டம் நடைபெறும் முன்பு வீதிகள் சரி செய்யப்படுமா?
தஞ்சை பெரிய கோவில்சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறும் முன்பு வீதிகள் சரி செய்ய வேண்டும். மழைநீர் வடிகால்கள் சரி செய்து, கட்டிட இடிபாடுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை பெரிய கோவில்சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறும் முன்பு வீதிகள் சரி செய்ய வேண்டும். மழைநீர் வடிகால்கள் சரி செய்து, கட்டிட இடிபாடுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா, சித்திரை பெருவிழா, வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதில் சித்திரைப்பெருவிழா கொடியேற்றம் கடந்த 17-ந்தேதி நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி நடைபெறுகிறது. தேரோட்டம் நடைபெறுவதற்கு இன்னும் 10 நாட்கள் உள்ளன.
நிறைவடையாத பணிகள்
வழக்கமாக தேரோட்டம் தேர் முட்டியான மேலவீதியில் இருந்து தொடங்கி வடக்கு வீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடையும். இதற்காக கடந்த ஆண்டு தேரோட்டத்தின் போது 4 வீதிகளும் அலகப்படுத்தப்பட்டு தேர்முட்டிகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு அழகுப்படுத்தப்பட்டன. மேலும் 4 வீதிகளிலும் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டு, அதன் மீது நடைபாதை அமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டன.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் பணிகள் நிறைவடையவில்லை. இதில் மழைநீர்வடிகால் பணிகள் மேலவீதி மற்றும் தெற்கு வீதியில் மாநகராட்சி சார்பிலும், கீழராஜவீதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் மேற்கொள்ளப்பட்டன.
சாலையில் கட்டிட இடிபாடுகள்
இதில் மேலவீதியில் மழைநீர் வடிகால் பணிகள் கட்டப்பட்டு அதன் மீது கான்கிரீட் போடப்பட்டுள்ளது. தெற்கு வீதியில் இன்னும் பணிகள் நிறைவு பெற வில்லை. வடக்கு வீதியில் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. கீழராஜவீதியும், தெற்கு வீதியும் சந்திக்கும் இடத்தில் இன்னும் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. மேலும் தெற்கு வீதியில் ஆங்காங்கே கட்டிட கழிவுகளும் கொட்டப்பட்டு குவியல், குவியலாக காட்சி அளிக்கிறது.சாலைகளும் சேதம் அடைந்து உள்ளன. மேலவீதியும், தெற்கு வீதியும் சந்திக்கும் இடத்தில் தற்போது மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேரோட்டத்திற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் சாலைகள் சீர் செய்து தருவதோடு, கட்டிட இடிபாடுகளையும் அகற்றவேண்டும். மழைநீர் வடிகால்கள் கட்டப்படாத இடங்களில் தடுப்புக்கட்டைகள் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளன.
தேர்முட்டிகளை அலங்கரிக்க வேண்டும்
தேரோட்டத்திற்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன்:- தஞ்சையில் உள்ள ராஜவீதிகளில் பெரியகோவில் சித்திரை தேர் திருவிழா வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து முத்து பல்லக்கு விழா , , கருட சேவை விழா நடைபெறுகிறது. தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்பு 4 ராஜவீதிகளிலும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். மேலும் ஆங்காங்கே சாக்கடை திறந்து கிடப்பதால் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க ணே்டும். திங்கட்கிழமை தேரோட்டம் நடைபெறுவதாலும், அதற்கு முன்பு 2 நாட்கள் விடுமுறை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். எனவே அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். பெரியகோவில் தேர்முட்டிகள் வண்ண விளக்குகளல் அலங்கரிக்க வேண்டும். ஆங்காங்கே சாலையோரங்களில் கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்டு உள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது. அவற்றையும் உடனடியாக சீர் செய்ய வேண்டும். தேரோட்டம் நடைபெறும் போது அதிக ஒலி எழுப்பும் வகையில் பயன்படுத்தப்படும் ஊதுகுழல்களை தடை செய்ய வேண்டும்.
தடுப்புக்கட்டைகள்
சமூக ஆர்வலர் ஜெய்சங்கர் கூறுகையில், தேரோட்டத்திற்கு முன்பாக 4 ராஜவீதிகளிலும் உள்ள சாலைகளை சீரமைத்து தேரோட்டம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 ராஜவீதிகளிலும் உள்ள கோவில்களில் வர்ணம் பூச வேண்டும். ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வடக்கு வீதி உள்ளிட்ட இடங்களில் சாக்கடை வாய்க்கால் செல்லும் பகுதிகளில் பக்தர்கள் விழுந்து விடாமல் இருப்பதற்காக தடுப்புக்கட்டைகள் கட்ட வேண்டும். தேரோடும் 4 வீதிகளிலும் மின்கம்பிகள் செல்கின்றன. இந்த மின்கம்பிகளை பூமிக்கு அடியில் செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பக்தர்கள் தேரோட்டத்தை சிரமம் இன்றி காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.