தச்சமொழியில் கோவில் கொடைவிழா:முத்துமாரியம்மன் பூஞ்சப்பரத்தில் வீதிஉலா
தச்சமொழியில் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு முத்துமாரியம்மன் பூஞ்சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் தச்சமொழி முத்துமாரியம்மன் கோவில் ஆடி கொடை விழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது. முதல் நாள் காலையில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில், சாத்தான்குளம் தேவி அழகம்மன் கோவில் ஆகிய கோவில்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, அம்பாள் மற்றும் பரிவார தெயவங்களுக்கு வருசாபிஷேகம் நடைபெற்றது. இரவு திருவிளக்கு பூஜை, வில்லிசை நடந்தது. 2-ஆம் நாள் வில்லிசை, முத்து விநாயகர், முருகர், பெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, இரவு அம்மன் கும்பம் ஏந்தி வீதி உலா வருதல், தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் பெட்டி எடுத்து ஊர்வலமாக வருதல், சிறப்பு பூஜை நடைபெற்றது. 3-ஆம் நாள் தேவி அழகம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை, மதியம் அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு மேள தாளத்துடன் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். பூஞ்சப்பரத்தில் முத்துமாரியம்மன் வீதி உலா நடந்தது. நேற்று வில்லிசை, உச்சிகால பூஜை, இரவு மாக்காப்பு பூஜை, தொடர்ந்து அம்மன் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் நடந்தது. இன்று(வியாழக்கிழமை) காலை 6மணிக்கு சுவாமி உணவு எடுத்தல், தொடர்ந்து பகதர்களுககு பிரசாதம் வழங்குதலுடன் விழா நிறைவுபெறுகிறது.