வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கங்கைக்கு பாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கங்கைக்கு பாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கங்கைக்கு பாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கங்கைக்கு சாபவிமோசனம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த இக்கோவில் கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக தலவராறு கூறுகிறது. இங்கு அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தந்ததாக ஐதீகம்.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று கங்கைக்கு பாப விமோசனம் தரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கல்யாணசுந்தரர் வீதி உலாவாக கோவில் தீர்த்தக்குளமான மணிக்கர்ணிகை குளத்துக்கு எதிரே உள்ள சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து பூ, பழம் உள்ளிட்ட மங்கல பொருட்களை மணிக்கர்ணிகை தீர்த்தக்குளத்தில் போட்டு கங்கைக்கு பாப விமோசனம் அளிக்கப்பட்டது. முன்னதாக சப்தகன்னியருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் யாழ்ப்பாணம் வரணீ ஆதினம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, செயல்அலுவலர் அறிவழகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வனதுர்க்கை அம்மன்
இதேபோல் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன் கோவில், வேதாரண்யம் மேல வீதி மாணிக்கவாசகர் மடம், வேம்ப தேவன்காடு தெற்கு மவுன சித்தர் பீடம் உள்ளிட்ட இடங்களில் நேற்று பங்குனி மாத பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
வாய்மேடு
வாய்மேட்டில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு பழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு பழனி ஆண்டவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தலைஞாயிறு அக்ரஹாரத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து வருகின்றன. இதில் கோதண்டராமர் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.