500 கிலோ பூக்களால் மதுரகாளியம்மனுக்கு ஊஞ்சல் அலங்காரம்
500 கிலோ பூக்களால் மதுரகாளியம்மனுக்கு ஊஞ்சல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
கும்பகோணம் அருகே ஆடுதுறையில் பிரசித்திப்பெற்ற மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு 94-ம் ஆண்டு திருநடன உற்சவம் கடந்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. உற்சவத்தையொட்டி கடந்த 4-ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் 30-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் மங்கலவாத்தியங்களுடன் அம்பாள் திருநடன உற்சவம் தொடங்கியது. கடந்த 9-ந் தேதி மதுர காளியம்மன் கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அப்போது 500 கிலோ பூக்களால் மதுரகாளியம்மனுக்கு ஊஞ்சல் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் மதுரகாளியம்மன் ஒய்யாரமாக படுத்து இருப்பதுபோன்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து 500 கிலோ பழங்கள் மற்றும் நெய்வேத்திய பிரசாதங்கள் வைத்து படையலிட்டனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரையிலிருந்து அலகு காவடிகளுடன் 1008 பால்குடம் ஊர்வலம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.