மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் குடமுழுக்குதருமபுரம் ஆதீனம் தகவல்
மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது என தருமபுரம் ஆதீனம் கூறினார்.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குரு அனுக்கிரக தலமான வதான்யேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதை முன்னிட்டு தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் மேதா தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. அப்போது தெட்சிணாமூர்த்திக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் நிருபர்களிடம் கூறுகையில், 'குரு அனுக்கிரக தலமான வதான்யேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கோவில் குடமுழுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதம் 3-ந் தேதி அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான மயிலாடுதுறை அருகே கொற்கையில் உள்ள வீரட்டேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது' என்றார்.