கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் மலர் வழிபாட்டு விழா


கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் மலர் வழிபாட்டு விழா
x

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் மலர் வழிபாட்டு விழா நடைபெற்றது.

திண்டுக்கல்

கொடைக்கானலில் பிரசித்திபெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலின் உப கோவிலான இங்கு ஆண்டுதோறும் மலர் வழிபாட்டு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான மலர் வழிபாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

பின்னர் கோடை இன்டர்நேஷனல் ஓட்டல் சார்பில் கோவிலின் பல்வேறு இடங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அத்துடன் கோவிலில் பல்வேறு விதமான பொருட்களை கொண்டு நட்சத்திர ஏரி மாதிரி வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் அறுபடை வீடுகளை நினைவுபடுத்தும் விதமாக மலர்கள் மற்றும் நவதானியங்களை கொண்டு சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதில், முருகப்பெருமானின் உருவமும் அமைக்கப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாக பரவசப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து மாலையில் குறிஞ்சி ஆண்டவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, பல்வேறு பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முடிவில் கோடை இன்டர்நேஷனல் ஓட்டல் நிர்வாக இயக்குனர் எஸ்.ஜி.பாண்டுரங்கன் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.

இதில், ஓட்டலின் இணை இயக்குனர் ஜீவானந்தம், அ.தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் நகரசபை தலைவர் கோவிந்தன், நகராட்சி துணைத்தலைவர் மாயக்கண்ணன், கவுன்சிலர் ஜெயசுந்தரம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.



Next Story