காளஹஸ்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
குத்தாலம் அருகே ஏ.கிளியனூரில் காளஹஸ்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
குத்தாலம்;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சுகனூர் என்றழைக்கப்படும் ஏ.கிளியனூர் கிராமத்தில் காளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் இயற்கை சீற்றங்களால் சிதிலம் அடைந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லிங்கம், நந்தி ஆகியவை கிடைக்கப் பெற்றதை அடுத்து கிராம மக்கள் கோவில் அமைக்க திட்டமிட்டு திருப்பணிகளை தொடங்கினர். திருப்பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து நேற்று குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு பரிவார தெய்வங்களான விநாயகர், அய்யனார், செல்லியம்மன் ஆகிய கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து காளகஸ்தீஸ்வரர் கோவில் விமானத்துக்கு கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கையொட்டி பாலையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.