அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவிலில் 100 கிடாக்களை வெட்டி வாகன ஓட்டுனர்கள் நேர்த்திக்கடன்; ரெயில் என்ஜினை நிறுத்தி ஊழியர்கள் வழிபாடு


அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவிலில் 100 கிடாக்களை வெட்டி வாகன ஓட்டுனர்கள் நேர்த்திக்கடன்; ரெயில் என்ஜினை நிறுத்தி ஊழியர்கள் வழிபாடு
x

அய்யலூரில் உள்ள வண்டி கருப்பணசாமி கோவிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி 100 கிடாக்களை வெட்டி வாகன ஓட்டுனர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திண்டுக்கல்

அய்யலூரில் உள்ள வண்டி கருப்பணசாமி கோவிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி 100 கிடாக்களை வெட்டி வாகன ஓட்டுனர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வண்டி கருப்பணசாமி

வடமதுரை அருகே அய்யலூரில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்திபெற்ற வண்டி கருப்பணசாமி கோவில் உள்ளது. திண்டுக்கல்-திருச்சி சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு இந்த கோவிலில் வழிபட்டு செல்வது வழக்கம். மேலும் புதிதாக வாகனங்கள் வாங்குவோரும் இந்த கோவிலுக்கு வந்து வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். மேலும் ஆடி மாத கடைசி நாளில் வாகன ஓட்டிகள் கருப்பணசாமிக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

அதன்படி, ஆடி மாத கடைசி நாளான இன்று கோவிலில் கிடாவெட்டு திருவிழா நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அப்போது நேர்த்திக்கடனாக கொண்டுவரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிடாக்களை பலியிட்டு வாகன ஓட்டுனர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

ரெயில்வே ஊழியர்கள்

இதற்கிடையே கோவிலை ஒட்டியுள்ள ெரயில் தண்டவாளம் வழியாக திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி ரெயில்வே மின்சார கம்பிகளை பராமரிப்பு பணிக்கான ெரயில் என்ஜின் வந்தது. அப்போது என்ஜினில் வந்த பராமரிப்பு ஊழியர்கள், வண்டி கருப்பணசாமி கோவில் அருகே ெரயில் என்ஜினை சிறிது நேரம் நிறுத்திவிட்டு, கோவிலில் வழிபாடு செய்தனர். அதன் பின்னர் பூ, எலுமிச்சை உள்ளிட்ட பூஜை பொருட்களை ெரயில் என்ஜின் முன்பு கட்டினர். அதன்பிறகு அங்கிருந்து ரெயில் என்ஜினில் திருச்சி நோக்கி சென்றனர்.

இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் கூறுகையில், அய்யலூர் வண்டி கருப்பணசாமி சாலை விபத்துகளை தடுக்கும் கடவுள். சாலை விபத்துகளை மட்டுமின்றி ெரயில் விபத்துகளையும் சாமி தடுத்து வருவதாக நம்புகிறோம். இதனால் விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்க வண்டி கருப்பணசாமியை வழிபட்டு செல்வதாக தெரிவித்தனர்.


Next Story