பெரியகுளம் பாலசுப்பிரமணியசாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம்

பெரியகுளம் பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் தென்கரையில், வராகநதி கரையில் பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி தென்கரை கச்சேரி ரோட்டில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர் அலங்கரிக்கப்பட்டது. பெரிய தேரில் அறம் வளர்த்த நாயகி சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் சுவாமி, சோமாஸ் கந்தர் உற்சவராக எழுந்தருளினார். வள்ளி-தெய்வானையுடன், பாலசுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் சிறிய தேரில் எழுந்தருளினார். மாலை 4.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். கச்சேரி ரோடு, கீழரத வீதி, மேல ரதவீதி வழியாக சென்று 6.15 மணிக்கு 2 தேர்களும் நிலையை அடைந்தது.
இதில், பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், நகர கூட்டுறவு பண்டகசாலை தலைவர் துரைப்பாண்டி, நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு நிர்வாகிகள், கோவில் செயல் அலுவலர் ராமதிலகம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.