பழனி அருகே படபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பழனி அருகே படபத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழனி அருகே மொல்லம்பட்டியில் படபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 9-ந்தேதி சண்முகநதியில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 10-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், பஞ்சகவ்ய பூஜை, கணபதி யாகம் நடைபெற்று யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 11-ந்தேதி 2-ம் கால யாகசாலை பூஜை, கோபுர கலசம் வைத்தல், சுவாமிக்கு கண் திறப்பு, தீபாராதனை ஆகியவை நடந்தது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து புனிதநீர் வைக்கப்பட்ட கலசங்கள் யாகசாலையை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 5.30 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கோவில் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து படபத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
பூஜை நிகழ்ச்சிகளை கீரனூர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், நல்ல சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் ஆகியோர் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் காணியாளர் மோகன்ராஜ், பண்ணாடி ராமுக்கண்ணு, நிர்வாகிகள் முருகேசன், கருப்புசாமி, செல்வராஜ் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். இதில், புளியம்பட்டி, ரூக்குவார்பட்டி, மொல்லம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.