நாகநாதர் கோவிலில் யாகசாலை பூஜை
குடமுழுக்கு நடந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றதையொட்டி நாகநாதர் கோவிலில் யாகசாலை பூஜை நடந்தது.
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு தலம் நாகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராகு பகவான் நாகக்கன்னி, நாகவல்லி என இரு தேவியருடன் மங்கள ராகுவாக அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி முதல் ஆண்டு சம்வத்ராபிஷேகம் நேற்று மாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அர்ச்சகர்கள் சங்கர், செல்லப்பா, சரவணன், ராஜேஷ், மூர்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு யாகசாலை பூஜைகளை நடத்தினர். இரவு முதல் கால பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(வியாழக்கிழமை) காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று சம்வத்ராபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய உதவி ஆணையர்(கூடுதல் பொறுப்பு) உமாதேவி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்துள்ளனர்.