பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு; கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி திருநாளையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 2 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு மூலவர் சாமிக்கு பால், பழம் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் ஆழ்வார்களுக்கு மரியாதை சம்பிரதாயங்கள் நடைபெற்று காலை 5.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு 'கோவிந்தா, கோவிந்தா' என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு சுவாமி கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் தரிசனம்
இதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை 6 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பிறகு சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன் மண்டபத்தில் 11 அடி உயர திருப்பதி ஏழுமலையான் விஸ்வரூபம் மற்றும் வைகுண்ட நாதர், சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென்திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பையொட்டி நேற்று முன்தினம் மாலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
தாடிக்கொம்பு
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதன்பிறகு சன்னதியில் இருந்து புறப்பட்ட பெருமாள் பரிவார வலம் வந்தார். தொடர்ந்து காலை 6.40 மணிக்கு பரமபதவாசலுக்கு வந்தவுடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஆழ்வார்களுக்கு பெருமாள் காட்சியளித்தார். பின்னர் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளினார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷமிட்டபடி தரிசனம் செய்தனர்.
இதில், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, துணை ஆணையர் சுரேஷ், கோவில் செயல் அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
ரெட்டியார்சத்திரம்
ரெட்டியார்சத்திரத்தில் உள்ள கதிர்நரசிங்க பெருமாள் கோவிலில் அதிகாலை 3 மணியளவில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஏழுமலையப்பசுவாமி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி, ராமானுஜர் எதிர்கொள்ள சொர்க்கவாசல் வழியாக கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாவித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். அபிஷேக ஆராதனைகளை சுகுமார் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.
வடமதுரை
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி காலை 5 மணியளவில் நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு திருமஞ்சனமும், அதன்பின்னர் நெய்வேத்தியம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து பெருமாள் சன்னதியில் இருந்து புறப்பாடாகி பரமபத மண்டபத்தை வந்தடைந்தார். அதன்பின்னர் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் விசுவநாத், செயல் அலுவலர் கற்பக வெண்ணிலா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.