தஞ்சை பெரிய கோவிலில் சிவராத்திரி விழா


தஞ்சை பெரிய கோவிலில் சிவராத்திரி விழா
x

தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் பெரிய கோவில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் பெரிய கோவில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சிவராத்திரி விழா

சிவன்கோவில்களில் சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது மகாசிவராத்திரி. சிவபெருமானை விட்டு பிரியாத சக்தி அனைத்து உயிர்களும் உயர்வு பெற நான்கு காலங்களும் சிவனை பூஜித்த காலமே மகாசிவராத்திரி எனப்படுகிறது.தஞ்சாவூர் பெரியகோவில், தஞ்சபுரீஸ்வரர் கோவில், மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் இந்த சிவராத்திரி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு நேற்று இரவு 10 மணி, நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி என நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

விடிய, விடிய தரிசனம்

சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று மாலை முதலே பக்தர்கள் வந்து தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர். சிவராத்திரி என்பதால் இரவு முழுவதும் மட்டும் அல்லாமல் விடிய, விடிய பக்தர்கள் சிவனை வழிபட்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சிவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலை சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகள்

சிவராத்திரி விழாவையொட்டி தஞ்சை திலகர் திடல் அருகே அரண்மனை தேவஸ்தானம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பத்மநாபன் குழுவினரின் மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது.கலைநிகழ்ச்சியை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (பொறுப்பு) சூரியநாராயணன், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, சதய விழாக்குழு தலைவர் து.செல்வம், மண்டலக்குழு தலைவர்கள் மேத்தா, ரம்யா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பறை இசை- குச்சிப்புடி

அதைத்தொடர்ந்து மீரா குழுவினரின் கயிலாய வாத்தியம், லட்சுமணன் வாத்தியாரின் தெருக்கூத்து, காமாட்சி பத்மா குழுவினரின் நாத இசை சங்கமும், சீர்காழி சிவசிதம்பரம் குழுவினரின் பக்தி இசை, புலவர் ராமலிங்கம் குழுவினரின் பட்டிமன்றம், தேன்மொழி ராஜேந்திரன் குழுவினரின் பறை இசை, காவடி, கரகாட்டம், நையாண்டி மேளம், சிவன்சக்தி நடனம், கலாபரத் மற்றும் தேஜாஸ் குழுவினரின் பரதநாட்டியம், தியசோனவின் குச்சிப்புடி நடனமும் நடைபெற்றது. நிறைவாக தொலைக்காட்சி புகழ் பாடகர்களின் பக்தி இசை பாடல்கள் நடைபெற்றது.


Next Story