பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜை
பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜை நடைபெற்றது.
பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை பகுதியில் இடும்பன் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு இடும்பன், முருகன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை மற்றும் காவடி எடுத்து வரும் பக்தர்கள் இடும்பன்குளத்தில் நீராடி விட்டு இடும்பன் சன்னதியில் வணங்கி விட்டு அதன் பின்னரே முருகப்பெருமானை தரிசனம் செய்ய பழனி மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இந்த கோவிலில் கடந்த 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. எனவே இடும்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து நேற்று பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை நடந்தது. முன்னதாக கோவிலில் சிறப்பு பூஜை, யாகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.