கோவில்களின் குறைகளை தெரிவிக்க உதவி மையம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்


கோவில்களின் குறைகளை தெரிவிக்க உதவி மையம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்
x

கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் கோவில்களின் குறைகளை தெரிவிக்க உதவி மையம் அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்.

சென்னை,

இந்து அறநிலையத்துறை கோவில்கள் தொடர்பான விவரங்களை பொதுமக்கள், பக்தர்கள் அறிந்து கொள்ளவும், குறைகளை தெரிவிக்க 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் சேவையும், சென்னையில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேர உதவி மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்.

இந்தநிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்து அறநிலையத்துறை கோவில்களின் குறைகளை தெரிவிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையத்தில் பெறப்படும் புகார்களுக்கு புகார் எண் வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலருக்கும் உரிய நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்படும். மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் ஒப்புகையும் அனுப்பி வைக்கப்படும்.

இதன் மூலம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்று செயல்படுத்தப்படும். புகார்கள் சரி செய்யப்படும்.

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கோவிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. குறைகளை சரி செய்து நிர்வாகம் சீராக நடைபெறவும், பக்தர்களின் தரிசனத்திற்கு பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுப்பதும்தான் எங்கள் நோக்கமாகும்.

பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக வரப்பெற்ற தங்கத்தை வங்கியில் முதலீடு செய்யும் திட்டத்தை வெளிப்படைத்தன்மையுடன் நிறைவேற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story