பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கோவில் நிலத்தை வழங்க வேண்டும்


பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கோவில் நிலத்தை வழங்க வேண்டும்
x

நெல்லூர்பேட்டையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கோவில் நிலத்தை வழங்க வேண்டும் என பொதுமக்கள், குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, இலவச வீடுகள், வேலைவாய்ப்பு வேண்டி, கிராம பொதுப் பிரச்சனைகள், குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் மனு அளித்தனர். மொத்தம் 417 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

கோவில் நிலம்

கூட்டத்தில் பனப்பாக்கத்தை அடுத்த நெல்லூர் பேட்டை கிராமத்தில் மிகவும் பழமையான நல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் பாதியை வீட்டுமனை பிரிவுகளாக மாற்றி விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் கிராம வளர்ச்சிக்காக பயணிகள் நிழற்கூடம், சமுதாய கூடம் மற்றும் அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கு கோவில் நிலத்தை ஒதுக்க வேண்டும் எனவும், ஏற்கனவே கோவில் நிலத்தை விற்பனை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கவுன்சிலர் நெந்தமிழ்செல்வன் தலைமையில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் ஸ்ரீ வள்ளி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, நேர்முக உதவியாளர் (நிலம்) கலைவாணி, உதவி ஆணையாளர் (கலால்) வரதராஜ், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story