எரியோடு அருகே 7 சிறுமிகளை சப்த கன்னிகளாக பாவித்து வழிபாடு
எரியோடு அருகே 7 சிறுமிகளை சப்த கன்னிகளாக பாவித்து அய்யப்ப பக்தர்கள் வழிபாடு செய்தனர். அப்போது பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
எரியோடு அருகே 7 சிறுமிகளை சப்த கன்னிகளாக பாவித்து அய்யப்ப பக்தர்கள் வழிபாடு செய்தனர். அப்போது பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சப்த கன்னிகள்
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தொட்டணம்பட்டியில் அய்யப்ப பக்தர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி அந்த ஊரை சேர்ந்த 7 வயது முதல் 10 வயது வரையுள்ள 7 சிறுமிகளை தேர்வு செய்து, அவர்களை சப்த கன்னிமார் தெய்வங்களாக பாவித்து வழிபாடு நடத்துவார்கள். அதன்படி இந்த ஆண்டிற்கான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 7 நாட்களுக்கு முன்பு சப்த கன்னிகளாக 7 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சப்த கன்னிமார் தெய்வங்களாக பாவிக்கப்பட்டு, மஞ்சள் உடை அணியவைத்து, கையில் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அதேபோல் அய்யப்ப பக்தர்களும் விரதம் தொடங்கினர். பின்னர் சிறுமிகள் கோவிலில் தங்கவைக்கப்பட்டு, சுவாமிகளுக்கு பூஜை நடத்துவது போன்று, அவர்களுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்று வந்தது.
பூக்குழி இறங்கினர்
இந்தநிலையில் விழாவின் 7-வது நாளான நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஊர் எல்லையில் இருந்து சப்த கன்னிகளான 7 சிறுமிகள் நெய்விளக்கு ஏந்தி ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத்தொடர்ந்து பூக்குழி இறங்குவதற்காக ஆழி வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் இரவு சப்த கன்னிகளான 7 சிறுமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது சுவாமி அய்யப்பன் பஜனை பாடல்களை பாடியபடி பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையொட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் வேடசந்தூர், வடமதுரை, எரியோடு, குஜிலியம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.