வீரகனூரில் மதுர காளியம்மன் கோவில் தேரோட்டம்திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
தலைவாசல்
தலைவாசல் அருகே வீரகனூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவில் தேரோட்டம் 27 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடைபெற்றது. விழாவில் நேற்று காலை 9 மணிக்கு சந்தி பூஜை நடந்தது. இதையடுத்து காலை 11 மணிக்கு மதுரகாளியம்மன் தேரில் அமர வைக்கப்பட்டு மதியம் 2.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆத்தூர், தலைவாசல் ஆறகளூர், வி.இராமநாதபுரம், கிழக்கு ராஜபாளையம், திட்டச்சேரி, கவர்பனை, வெள்ளையூர், பகடப்பாடி, பூலாம்பாடி, இலுப்பநத்தம், வேப்பம்பூண்டி என பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலை நின்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், குங்குமம் என பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மதுர காளியம்மனுக்கு எலுமிச்சம் மாலை அணிவித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.