பூசாரி விவகாரத்தில் கோவிலை பூட்டக்கூடாது -தாசில்தாருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுரை
பூசாரி விவகாரத்தில் கோவிலை பூட்டக்கூடாது என்று தாசில்தாருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா எம்.பெருமாள்பட்டி செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திருமங்கலம் மதிப்பனூர், எம்.பெருமாள்பட்டி கிராமத்தில் பேச்சி, விருமன் தெய்வங்களுடன் கோவில் உள்ளது. இந்த கிராம கோவிலில் யார் பூசாரியாக செயல்படுவது என்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, கோவிலை பூட்டுவதற்கான நடவடிக்கையை திருமங்கலம் தாசில்தார் மேற்கொண்டுள்ளார். அவ்வாறு கோவிலை பூட்டினால் பொதுமக்கள் வழிபட முடியாது. இதனால் கிராம பக்தர்கள் அவதிக்குள்ளாவார்கள். எனவே கோவிலை பூட்டுவதற்கான தாசில்தாரின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கிராம கோவிலில் யார் பூசாரியாக செயல்படுவது என்பது இருவருக்கு இடையேயான விவகாரம். இதில் இருந்து வருவாய் அதிகாரிகளும், போலீசாரும் சற்று விலகி இருங்கள். கிராம கோவில் பூட்டப்படக்கூடாது. கோவிலை பொது வழிபாட்டிற்காக திறந்து வைக்க வேண்டும். ஏதேனும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டாலோ, குற்றச்சம்பவம் நடந்தாலோ சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என கருத்து தெரிவித்த நீதிபதி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.