குப்பூர் ஆலங்கரையில் சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
குப்பூர் ஆலங்கரையில் சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே குப்பூர் ஆலங்கரையில் சென்னகேசவ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. மாரியம்மனுக்கு பால் அபிஷேகம், கூழ் ஊற்றுதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விநாயகர் உற்சவமும், சென்னகேசவ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் அருள்பாலிக்க திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு வேடர்பறி உற்சவம் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வசந்த உற்சவமும், இரவு சயன உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.