மாவட்டத்தில் கோவில்களில் நடை அடைக்கப்பட்டது


மாவட்டத்தில் கோவில்களில் நடை அடைக்கப்பட்டது
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சந்திர கிரகணத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களின் நடை அடைக்கப்பட்டது.

தர்மபுரி

சந்திர கிரகணத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களின் நடை அடைக்கப்பட்டது.

சந்திர கிரகணம்

சந்திர கிரகணத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களின் நடை நேற்று அடைக்கப்பட்டது. அனைத்து கோவில்களிலும் காலை வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. நேற்று பவுர்ணமி என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கோவில்களின் நடை அடைக்கப்பட்டன. பின்னர் இரவு 7 மணிக்கு மேல் கோவில்களின் நடை திறக்கப்பட்டு தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் நேற்று காலை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து உச்சிகால பூஜையும், தொடர்ந்து சந்திர கிரகணத்தையொட்டி நவகிரக சன்னதியில் சந்திரனுக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டது.. இரவு 7 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜையும், சந்திரனுக்கு சாந்தி பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அவரவர் நட்சத்திரங்களுக்கு ஏற்றார் போல் பரிகார பூஜை செய்து கொண்டனர்.

கோட்டை கோவில்

இதேபோல் கோட்டை மல்லிகாஜூனேஸ்வரர் கோவில், பரவாச தேவபெருமாள் கோவில், நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில் மற்றும் மகாலிங்கேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் ஆகிய கோவில்களின் நடை மதியம் 1 மணிக்கு அடைக்கப்பட்டது. பின்னர் இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் எஸ்.வி. ரோடு சாலை விநாயகர் கோவில், அபய ஆஞ்சநேயர் கோவில், சுப்பிரமணியசாமி கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களின் நடை அடைக்கப்பட்டன.

இதேபோன்று அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி காலசந்தி பூஜை, உச்சிக்கால பூஜை மற்றும் சாயரட்சை பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு மதியம் 1 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.

தீர்த்தமலை கோவில்

இதேபோன்று சென்றாய பெருமாள் சாமி கோவில், வே.முத்தம்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவில், அக்கமணஅள்ளி ஆதிமூல வெங்கட்ரமண சாமி கோவில், அதகப்பாடி லட்சுமி நாராயணசாமி கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில், கம்பைநல்லூர் சுப்பிரமணிய சாமி கோவில், ஒகேனக்கல் தேச நாதேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் நேற்று மதியம் 1 மணிக்கு அடைக்கப்பட்டு இரவு 7 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டன. தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.


Next Story