சுவாமி-அம்பாள் பர்வதம் மண்டகப்படிக்கு சென்றதால் கோவில் நடை அடைப்பு
ராமேசுவரம் ேகாவிலில் நடந்துவரும் மாசி மகா சிவராத்திரி விழாவையொட்டி சுவாமி, அம்பாள் நேற்று பர்வதம் மண்டகப்படிக்கு சென்றனர். இதனால் கோவில் நடை சாத்தப்பட்டு இருந்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ேகாவிலில் நடந்துவரும் மாசி மகா சிவராத்திரி விழாவையொட்டி சுவாமி, அம்பாள் நேற்று பர்வதம் மண்டகப்படிக்கு சென்றனர். இதனால் கோவில் நடை சாத்தப்பட்டு இருந்தது.
மாசி சிவராத்திரி விழா
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசி மகாசிவராத்திரி திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 3-ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு ராமநாதசுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து எழுந்தருளினர்.
பின்னர் சுவாமி-அம்பாள் நடுத்தெரு, திட்டக்குடி சந்திப்பு சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு சென்றடைந்தனர். மாலையில் அங்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.
வாசலில் நின்று தரிசித்த பக்தர்கள்
மீண்டும் அங்கிருந்து புறப்பாடாகி இரவில் கோவிலுக்கு வந்தடைந்த பின்னர், அர்த்தசாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜை நடைபெற்று கோவில் நடையானது உடனடியாக சாத்தப்பட்டது. சுவாமி-அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளியதால், நேற்று காலை 7 மணியில் இருந்து இரவு வரையிலும் கோவிலில் பக்தர்கள் தீர்த்த கிணறுகளில் நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. கோவில் நடையும் சாத்தப்பட்டு இருந்தது. அதனால் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் நின்று சாமி தரிசனம் செய்துசென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவின் 4-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்திலும் இரவில் சுவாமி வெள்ளி கைலாய வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் 8-ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரி திருவிழா பூஜைகளும், மறுநாள் (19-ந் தேதி) தேரோட்டமும் நடைபெறுகிறது.