சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தாது


சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தாது
x

சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

தருமபுரம் ஆதீனம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்கு நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார். அப்போது அவருக்கு ஆதீனம் சார்பில் பூரண கும்பமரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு ஆதீனத்துக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையை திறந்து வைத்ததுடன், சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர் அங்குள்ள வேத பாடசாலையில் படிக்கும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது

குடமுழுக்கு

சட்டசபையில் 1500 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட அனைத்து கோவில்களிலும் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டுக்குள் 80 கோவில்களில் திருப்பணிகள் தொடங்கப்படும். கோவில் இடங்களில் வசிப்பவர்களை ஒரு கண்ணோட்டத்திலும், வணிகநோக்கில் இடத்தை பயன்படுத்துபவர்களை வேறொரு கண்ணோட்டத்திலும் அரசு பார்த்து வருகிறது. முறையான வாடகை செலுத்த முன்வந்தால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை அறநிலையத்துறை மேற்கொள்ளாது. ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 300 கோவில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது.

பழமை மாறாமல்

தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட 27 கோவில்களில் 18 கோவில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது.வெள்ளையங்கிரிநாதர், சதுரகிரி, பேரூர் நரசிம்மன்கோவில், பருவதமலை, கண்ணகிகோவில் ஆகிய 5 மலைகோவில்களை ஆய்வு செய்ய ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோவில்களில் பழமை மாறாமல் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் 2019-ம் ஆண்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. கொரோனா தொற்றுக்குப்பிறகு அனுமதி மறுக்கப்பட்டது.இது தொடர்பாக வக்கீல் கனகராஜ் என்பவர் ஐகோர்ட்டில் முறையீடு செய்ததால் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தி இருக்கிறது.

அறநிலையத்துறை கையகப்படுத்தாது

தருமபுரம் ஆதீனம் நிர்வகிக்கும் கோவில்களில் எந்த புகாரும் இல்லை. ஆனால் சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தவரையில் தீட்சிதர்கள் பிரச்சினை, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பிரச்சினை என பல்வேறு புகார்கள் வந்துள்ளன.இந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அறநிலையத்துறை சார்பில் கடிதம் அனுப்பி உள்ளோம். சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தாது. தீட்சிதர்களுக்கு, தில்லை நடராஜர் கோவிலுக்கு எதிரான நடவடிக்கை இல்லை. ஆய்வுசெய்யும் உரிமை அறநிலையத்துறைக்கு இருப்பதால் கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்களும் பதில் கடிதம் அனுப்பியுள்ளனர்.

பாரம்பரிய நிகழ்ச்சிகளில் தலையிடாது

சிறந்த முறையில் நிர்வாகம் நடைபெறும் கோவில்களை அறநிலையத்துறை கையில் எடுக்க முயற்சிக்க கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டத்துக்கு புறம்பான செயல்கள், புகார்கள் இருந்தால்தான் அந்த கோவில்கள் குறித்து விசாரணை நடத்துவோம். ஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் அறநிலையத்துறை தலையிடாது. அனைத்து கோவில்களிலும் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார். தொடர்ந்து அவர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பவள விழா

தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருக்கடையூர் கோவிலில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து ஆதீன வளாகத்தில் 27 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் பவளவிழா நிறைவு விழா ஆகஸ்டு மாதத்தில் வருகிறது.இந்த பவளவிழாவில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், நகரசபை தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.


Next Story