காசி விஸ்வநாதர் கோவிலில் திருப்பணி
மருத்துவக்குடி காசிவிஸ்வநாதர் கோவிலில் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.
மருத்துவக்குடி காசிவிஸ்வநாதர் கோவிலில் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.
காசி விஸ்வநாதர் கோவில்
தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் உள்ள மருத்துவக்குடி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோவில் 400 ஆண்டுகள் பழமையானது. கடந்த 1938-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது கோவிலில் திருப்பணி நடக்கிறது. வரும் 20-ந் தேதி குடமுழுக்கு நடக்கிறது.
இந்த நிலையில் கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.
பழமையை போற்றும் வகையில்...
கோவிலில் புராதானமிக்க முறையில் பழமையை போற்றும் வகையில் கடுக்காய், கற்றாழை, வெல்லம், சுண்ணாம்பு கொண்டு திருப்பணி செய்யும் முறையை பார்வையிட்டார். அப்போது கோவில் திருப்பணி கமிட்டியினர் மற்றும் ஸ்தபதி கணேசன் உள்ளிட்ட பணியாளர்களை பாராட்டினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், பழமையே பொக்கிஷம். அதை பாதுகாக்க வேண்டும். பொதுவாக கோவில்களை பழமை மாறாமல் திருப்பணி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். சிமெண்டு பயன்படுத்தாமல் சுண்ணாம்பு பூச்சை பயன்படுத்தும்போது ேகாவிலின் அனைத்து கட்டுமானமும் சிறப்பு பெறுகிறது.
594 கோவில்கள்
மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் கோவிலில் நாயக்கர் கால மண்டபம் உள்ளிட்டவற்றை முறையாக திருப்பணி செய்துள்ளனர். மிகவும் சிதலமடைந்து காணப்பட்ட பல விமானங்கள் பழமையான முறையில் அப்படியே மீட்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக அரசு கோவில் திருப்பணிகளுக்கு தொடர்ந்து முறையான அனுமதி வழங்கி வருகிறது. அத்தகைய வகையில் மயிலாடுதுறை மண்டலத்தில் 594 கோவில்களில் தற்போது திருப்பணி செய்யப்படுகிறது.
தீவிர கண்காணிப்பு
மழைக் காலமாக இருப்பதால் யாக சாலை பந்தல்கள், தகரக் கொட்டகை அமைத்து, மேலே மழை நீர் தேங்காதவாறு அமைக்க வேண்டும். மின்ஒயர்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும், அறநிலையத்துறையினர் குடமுழுக்கு முடியும் வரை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
அறநிலையத்துறையினரின் வழிகாட்டுதலின் படி நிகழ்ச்சிகள் திட்டமிட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மற்றும் திருப்பணி கமிட்டி பொறுப்பாளர் ம.க.ஸ்டாலின், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், பேரூராட்சி கவுன்சிலர் பாலதண்டாயுதம் மற்றும் கிராம நாட்டாண்மைகள் உடனிருந்தனர்.