கடலுக்குள் டெம்போ கவிழ்ந்தது
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்குள் கவிழ்ந்த டெம்போ, கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
குளச்சல்:
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்குள் கவிழ்ந்த டெம்போ, கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
டெம்போ கவிழ்ந்தது
குளச்சல் பகுதியை சேர்ந்தவர் பாபின். இவர் சொந்தமாக டெம்போ வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது ெடம்போ குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் இருந்து மீன்களை இறக்கி அருகில் உள்ள ஏலக்கூடத்துக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த டெம்போவில் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ரெஜி என்பவர் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலையில் ரெஜி வழக்கம்போல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் இருந்து மீன்களை ஏற்றி ஏலக்கூடத்துக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மீன்களை ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள ஏலக்கூடத்துக்கு கொண்டு சென்றபோது திடீரென டெம்போ கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் சுதாரித்துக் கொண்ட ரெஜி டெம்போவில் இருந்து குதித்து தப்பினார். அடுத்த சில நொடிகளில் டெம்போ கடலுக்குள் கவிழ்ந்து மூழ்கியது.
கிரேன் மூலம் மீட்பு
இதைகண்டு அங்கிருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், கிரேன் வரவழைக்கப்பட்டு மீனவர்கள் உதவியுடன் கடலில் மூழ்கிய டெம்போவை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.