தாமிபரணியில் தண்ணீர் எடுக்க தொழிற்சாலைகளுக்கு தற்காலிக தடை


தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தாமிபரணியில் தண்ணீர் எடுக்க தொழிற்சாலைகளுக்கு தற்காலிக தடைவிதிக்க வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜூவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வறட்சியால் குடிநீர் பிரச்சினையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதால், தாமிபரணி ஆற்றில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதற்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் நாம்தமிழர் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர். தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

பஸ்ைச மீண்டும் இயக்க வேண்டும்

அந்த மனுவில், தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பஞ்சாயத்து பொட்டல்காடு கிராமத்தில் இருந்து தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். எங்கள் ஊருக்கு 5சி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்த பஸ் கொரோனாவுக்கு பின்பு நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் நாங்கள் பொட்டல்காட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முள்ளக்காடு பகுதிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்ட 5சி பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தொழிற்சாலைகளுக்கு தற்காலிக தடை

தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் சுப்பையா பாண்டியன் மற்றும் கட்சியினர் கலெக்டர் செந்தில்ராஜிடம் கொடுத்த மனுவில், மாவட்டம் முழுவதும் தற்போது வறட்சி நிலவி வருவதால், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் குடிநீர் பிரச்சினையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் உறிஞ்சுவதை தற்காலிகமாக தடை செய்யவேண்டும். ஆற்றில் ஆலை கழிவுகள், சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுக்கவும், அதற்கு மாற்று ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் தேங்கி கிடக்கிற அமலை செடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

வீட்டுமனைப் பட்டா

தூத்துக்குடி மாவட்ட தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுடையோர் முன்னேற்ற சங்க தலைவர் பேர்சில், செயலாளர் அழகுலட்சுமி மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு திட்டங்குளம், தெற்கு திட்டங்குளம், தீத்தாம்பட்டி, தோனுகால் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு கடந்த 2 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.

குடிநீர் இணைப்பு

சாயர்புரம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் அ.சுவாமிதாஸ் தலைமையில் கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சாயர்புரம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 3-வது கட்டமாக 89 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகட்டுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி பயனாளிகள் வீடுகளை கட்டி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அரசு வழங்கும் மானியம் வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். சாயர்புரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு மெயின் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது. அதனை சரி செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.


Next Story