3 ஆண்டுக்கு பிறகு தற்காலிக பாலம் அமைப்பு
கூடலூரில் 3 ஆண்டுக்கு பிறகு நகராட்சி சார்பில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூரில் 3 ஆண்டுக்கு பிறகு நகராட்சி சார்பில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடைந்து விழுந்த பாலம்
கூடலூர் கோல்டன் அவென்யூ பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆற்று வாய்க்கால் உள்ளது. ஆண்டுதோறும் பெய்யும் கனமழையில் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் மீது கட்டப்பட்டு இருந்த சிமெண்ட் பாலம் உடைந்து விழுந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிய பாலம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 1-ம் மைல் பகுதியில் உள்ள தனியார் நிலம் வழியாக சென்று வந்தனர். இதைத்தொடர்ந்து உடனடியாக புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தற்காலிக பாலம் அமைப்பு
இந்தநிலையில் புதிய பாலம் அமைப்பதற்கான நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. இதற்கு போதிய நிதி ஒதுக்கிய உடன் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதுவரையில் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் நகராட்சி சார்பில் தற்காலிக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடும் வகையில் பாலம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமையில், நகராட்சி தலைவர் பரிமளா தற்காலிக பாலத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சிவராஜ், கவுன்சிலர் ஷகிலா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாலம் வசதி கிடைத்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சிமெண்ட் பாலம் கட்டி தர விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.