ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம்செய்வதை கைவிட வேண்டும்- ஓய்வூதியர்கள் சங்க மாநிலசெயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும் என்று ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தென்காசி அருகே உள்ள மேலகரம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட தலைவர் கருப்பையா வரவேற்றார். மாநில துணைத்தலைவர் முருகேசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில பொதுச்செயலாளர் ரவி வேலை அறிக்கையையும், பொருளாளர் மகாலிங்கம் நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர்.
இந்த கூட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கை நிலுவைகள், அனைத்து லஞ்ச ஒழிப்புத்துறை புகார் மனு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் அரசு நிர்ணயித்துள்ள காலவரையறைக்குள் முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளன்று தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும், என்பன உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 14-2-2023 அன்று சென்னை ஊரக வளர்ச்சி இயக்ககம் முன்பு நடைபெற உள்ள கோரிக்கை முறையீடு இயக்கத்தை சிறப்பாக நடத்த வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் சங்கரி, மாவட்ட தலைவர் திருமலைமுருகன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினார்கள். முடிவில் மாநில செயலாளர் கோமதி நாயகம் நன்றி கூறினார்.