போக்குவரத்து நெரிசலை குறைக்க தற்காலிக தரைப்பாலம்
குடியாத்தத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கவுண்டன்ய மகாநதி ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக புதிய தரைப்பாலம் அமைக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
குடியாத்தத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கவுண்டன்ய மகாநதி ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக புதிய தரைப்பாலம் அமைக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் செல்லும் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் நேற்று முன்தினம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஆட்டோ, லாரி, டிராவல்ஸ் ஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், அமலுவிஜயன் எம்.எல்.ஏ., துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராசன், ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், தாசில்தார் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கனரக வாகனங்களை அனுமதிக்கக்கூடாது
கூட்டத்தில் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும், கனரக வாகனங்கள் குடியாத்தம் நகருக்குள் வருவதை தவிர்த்து, உள்ளூர் வாகனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட வேண்டும்.
இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் சரக்குகளை கொண்டு வந்து இறக்கி அல்லது ஏற்றிச் செல்ல வேண்டும். ஆட்டோக்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தி பயணிகளை இறக்க வேண்டும், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வாகனங்களை நிறுத்தக்கூடாது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எடுத்துரைத்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், சாந்தி, நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் சம்பத்குமார், மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, லட்சுமி உள்பட நகர மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கொட்டும் மழையில் ஆய்வு
கூட்டம் முடிந்த பின் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், உதவி கலெக்டர் வெங்கட்ராமன், அமலுவிஜயன் எம்.எல்.ஏ, நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் உள்ளிட்ட அதிகாரிகள் கொட்டும் மழையில் அர்ஜுனமுதலி தெரு, காமராஜர் பாலம், கவுண்டன்ய மகாநதி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கடைக்காரர்கள் தாங்களாவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லை என்றால் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்கள் என அறிவுறுத்தினர்.
எம்.ஜி.ஆர். சிலை பின்புறம் உள்ள இரண்டு மதுபான கடைகளால்தான் அப்பகுதியில் அதிக அளவு நெரிசல் ஏற்படுவதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஓரிரு நாட்களில் அந்த மது கடைகள் அகற்றப்படும் என கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-
தற்காலிக தரைப்பாலம்
குடியாத்தம் நகரில் ஏற்பட்ட நெரிசல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கெங்கையம்மன் கோவில் தரைப் பாலம் அமைந்துள்ள பகுதி நகராட்சியில் இருந்து நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அரசுக்கு சென்று உத்தரவாக வந்த பின் உடனடியாக திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு இதற்கான பணிகள் தொடங்கப்படும். தற்காலிகமாக புதிதாக 15 பைப்புகள் பொருத்தப்பட்டு தரைப்பாலம் அமைக்கப்படும். 10 நாட்களுக்குள் பணி முடிவடையும். இந்த சாலை அமைக்கப்பட்டால் இதன் வழியாக இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். இதனால் ஓரளவு போக்குவரத்து குறையும். மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து வழிமுறைகளை கண்காணிக்க குடியாத்தம் உதவி கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். அதில் நகராட்சி ஆணையாளர் உறுப்பினர் செயலராக இருப்பார். காவல்துறை, வருவாய்த்துறை, மின்சார வாரியம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் அதில் பங்குபெறுவார்கள். அவர்கள் தொடர்ந்து கண்காணித்து குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.