சேலத்தில் தற்காலிக நர்சுகள் போராட்டம்-105 பேர் கைது
சேலத்தில் கொரோனா தொற்று காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக நர்சுகள் மீண்டும் பணி வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 105 பேரை போலீசார் இரவில் கைது செய்தனர்.
தற்காலிக நியமனம்
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதன்படி, ரூ.14 ஆயிரம் மாத சம்பளத்தில் சுமார் 6 ஆயிரம் நர்சுகள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு டிசம்பர் 31-ந் தேதியுடன் பணி முடிந்துவிட்டது என்றும், அதன்பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அறிவித்தது.
நர்சுகள் போராட்டம்
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நர்சுகள் யாரும் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலையோரம் நர்சுகள் அனைவரும் அமர்ந்து நேற்று இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 105 நர்சுகளை இரவில் போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னுரிமை
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் கூறும்போது, கொரோனா தொற்று பரவிய காலத்தில் தமிழகம் முழுவதும் தற்காலிகமாக நர்சுகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் டிசம்பர் மாதம் 31-ந்தேதியுடன் பணி முடிவடைந்து விட்டதாக கூறி எங்களுக்கு பணி வழங்கவில்லை. எனவே தற்காலிகமாக நியமிக்கப்பட்ட எங்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் அனைவரும் பணிபுரிந்தோம். சுகாதாரத்துறையில் காலியாக உள்ள நர்சுகள் பணியிடங்களில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், என்றனர்.