கொட்டரை நீர்த்தேக்கத்தின் மறுபுறத்தின் விவசாய நிலங்களுக்கு செல்ல தற்காலிக நடைபாதை வசதி


கொட்டரை நீர்த்தேக்கத்தின் மறுபுறத்தின் விவசாய நிலங்களுக்கு செல்ல தற்காலிக நடைபாதை வசதி
x

விவசாயிகளின் போராட்டத்தின் எதிரொலியாக கொட்டரை நீர்த்தேக்கத்தின் மறுபுறமும் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று வர தற்காலிக நடைபாதை வசதி விரைவில் அமைக்கப்பட உள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர்

6 ஆண்டுகளை கடந்து...

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே தமிழக அரசின் பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறை சார்பில் நீர்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் அந்த ஆண்டிலேயே மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும் என்று கூறிய பொதுப்பணித்துறை தற்போது 6 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது தான் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இறுதி கட்ட பணியான பாசன கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை சார்பில் கூறப்படுகிறது. நீர்த்தேக்கம் பணிகள் முடிக்கப்பட்டால் கொட்டரை, ஆதனூர், கூடலூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், தொண்டபாடி, நொச்சிக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் பயன்பெறும்.

விவசாயிகள் போராட்டம்

இந்த நீர்த்தேக்கத்துக்காக கொட்டரை, ஆதனூர் கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நீர்த்தேக்கத்தின் மறுகரையில் உள்ள நிலங்களுக்கு செல்ல பாதை அமைத்து தரக்கோரி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்து வந்தனர். மேலும் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பும் காலங்களில் மறுகரையில் உள்ள நிலங்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். பாதை வசதி செய்து தரக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தநிலையில், கடந்த 2 வாரமாக திங்கட்கிழமை அன்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்த அன்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு சென்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தின் எதிரொலியாக கொட்டரை நீர்த்தேக்கத்தின் மறுபுறமும் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று வர தற்காலிக நடைபாதை வசதி விரைவில் அமைக்கப்பட உள்ளது.

மாவட்ட நிர்வாகம் பாதை அமைத்து கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்களைத் திரட்டி மாபெரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நடைபாதை அமைத்து தர போதுமான நிதி ஆதாரம் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் கொட்டரை நீர்த்தேக்கத்திற்கு மறுபுறம் உள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் சென்று வர தற்காலிக நடைபாதை அமைத்து தரப்படும் என்று பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறையின் பெரம்பலூர் மருதையாறு வடிநில உப கோட்டத்தின் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். தற்காலிக நடைபாதை வசதி அமைத்து தரப்படும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே இருந்துவிடாமல் உடனடியாக அமைத்து கொடுக்க வேண்டும். மேலும் நிரந்தரமாக பாதை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story