தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை நிறுத்த வேண்டும்: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உண்ணாவிரதம்


தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை நிறுத்த வேண்டும்: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உண்ணாவிரதம்
x

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 4 ஆயிரத்து 989 இடைநிலை ஆசிரியர்கள், 5 ஆயிரத்து 154 பட்டதாரி ஆசிரியர்கள், 3 ஆயிரத்து 188 முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 331 ஆசிரியர் பணியிடங்களில் தகுதியுள்ள நபர்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக நியமித்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் அரசின் இந்த அறிவிப்புக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். அந்த வகையில் இதனை எதிர்த்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நல கூட்டமைப்பு சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதில் 2013-ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிலர் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் பங்கு பெற்று, தற்காலிக ஆசிரியர் நியமனம் வேண்டவே.... வேண்டாம்... என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

வழிகாட்ட வேண்டும்

உண்ணாவிரத போராட்டம் குறித்து, போராட்டத்தில் பங்கேற்றிருந்த அருள் உள்பட பலர் கூறியதாவது:-

ஆசிரியர் மறுநியமன தேர்வு என்ற அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும். 2013-ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.

தற்போது எங்களுக்கு கூடுதல் வேதனையாக தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அதில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக உள்ளவர்கள் என ஆசிரியர்களுக்கான அடிப்படை தகுதியில்லாதவர்களை கொண்டு நியமனம் செய்ய இருக்கின்றனர்.

இதனை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும். காலிப்பணியிடங்களில் ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணிக்காக காத்திருக்கும் எங்களை பழைய நியமனப்படி, அதில் நியமனம் செய்ய வேண்டும். பலமுறை போராட்டம் நடத்தி வரும் எங்களை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல் கல்வித்துறை அலைக்கழிப்பது வேதனை அளிக்கிறது. போராட்டத்தை தவிர வேறு எங்களுக்கு வழி எதுவும் தெரியவில்லை. எங்கள் கோரிக்கைக்கு முதல்-அமைச்சர் செவிசாய்த்து, எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story