கல்லணை கால்வாயில் போடப்பட்ட தற்காலிக தார்ச்சாலை அகற்றம்


கல்லணை கால்வாயில் போடப்பட்ட தற்காலிக தார்ச்சாலை அகற்றம்
x

தஞ்சையில் புதிய பாலங்கள் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகின்றன. கல்லணை கால்வாயில் போடப்பட்ட தற்காலிக தார்ச்சாலை அகற்றப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

தஞ்சையில் புதிய பாலங்கள் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகின்றன. கல்லணை கால்வாயில் போடப்பட்ட தற்காலிக தார்ச்சாலை அகற்றப்பட்டது.

இர்வீன் பாலம்

தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் உள்ள காந்திஜிசாலை மிக முக்கியமான சாலையாகும். பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம், ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை, மாரியம்மன்கோவில் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.

இந்த சாலையின் வழியாக செல்லும் கல்லணை கால்வாய் குறுக்கே இர்வீன்பாலம் கட்டப்பட்டு இருந்தது. மிக பழமையான இந்த பாலம் இடிக்கப்பட்டு தலா ரூ.1½ கோடி மதிப்பில் 2 பாலங்கள் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

தற்காலிக தார்ச்சாலை

இந்த பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோரின் வசதிக்காக கல்லணை கால்வாயின் குறுக்கே தற்காலிக தார்ச்சாலை போடப்பட்டு இருந்தது. இப்போது பாலங்கள் கட்டும் பணி முடிவடைந்துவிட்டது. தடுப்புச்சுவர்கள், சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாலங்கள் விரைவில் திறப்பு விழா காண உள்ளன.

இந்த பாலப்பணி காரணமாக கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

வாகனங்கள் அனுமதி

இந்தநிலையில் கல்லணை கால்வாயின் குறுக்கே போடப்பட்ட தற்காலிக தார்ச்சாலை நேற்றுஇரவு பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு, மண் எல்லாம் லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

இதன்காரணமாக நேற்றுஇரவு முதல் புதிய பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்கள், சைக்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.


Next Story