மீன்வளத்துறை அலுவலகத்தில் குத்தகைதாரர்கள் திடீர் தர்ணா


மீன்வளத்துறை அலுவலகத்தில் குத்தகைதாரர்கள் திடீர் தர்ணா
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பரபரப்பு: மீன்வளத்துறை அலுவலகத்தில் குத்தகைதாரர்கள் திடீர் தர்ணா ஏரிகளை டெண்டர் விடுவதை அதிகாரிகள் ரத்து செய்ததால் ஆத்திரம்

விழுப்புரம்

விழுப்புரம்

மீன் வளத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 39 ஏரிகளில் மீன் பிடிப்பதற்காக 3 வருடத்திற்கு ஒருமுறை குத்தகை விடப்படுவது வழக்கம். இதற்கு கடந்த 17-ந் தேதியிலிருந்து டெண்டர் கோரப்பட்டு 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு 31-ந் தேதி டெண்டர் விடப்படும் என மீன் வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி ஏரியில் மீன் பிடிப்பதற்கான டெண்டருக்கு குத்தகை தாரர்கள் விண்ணப்பித்த நிலையில் கீழ் எடையாளம், அத்தியூர் திருக்கை, கக்கனூர், சென்னகுனம், ஆலங்குடி ஆகிய 5 கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே டெண்டர் கோரியிருந்தார். ஆனால் ஒரு ஏரிக்கு 3 நபர்களுக்கு மேல் டெண்டர் கோரினால் மட்டுமே டெண்டர் விடப்படும் என கூறிய அதிகாரிகள் 5 ஏரிகளுக்கான டெண்டரை ரத்து செய்தனர்.

இதனையடுத்து டெண்டர் கோரியவர்கள் ஒரு நபர் மட்டுமே டெண்டர் கோரினால் ஏரியை குத்தகை விட முடியாது என முன் கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை, இதுபற்றி டெண்டர் நோட்டீசிலும் குறிப்பிடவில்லை என கூறி விழுப்புரத்திலுள்ள மீன் வளத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலுவலக நூழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் டெண்டர் கோரியவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டெண்டர் நடத்தை விதிமுறைகளின் படி 3 நபர்களுக்கு மேல் குத்தகை ஏலம் கேட்டால் மட்டுமே டெண்டர் விடப்படும் என்ற விதிமுறை உள்ளதால் அதிகாரிகள் அதன் படி செயல்படுவதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story