கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்தாமல் டெண்டர்கள் விடப்பட்டுள்ளது - பள்ளிப்பட்டு பேரூராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்
கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்தாமல் டெண்டர்கள் விடப்பட்டுள்ளது என்று பள்ளிப்பட்டு பேரூராட்சி கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல்அலுவலர் ஹரிஹர கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி கூட்டத்தில் 3 டெண்டர் பற்றிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் கோரி வைக்கப்பட்டன. அதில் 15-வது நிதி குழு மானியத்தில் 2021 - 2022 திட்டத்தின் கீழ் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் பஜார் தெரு விரிவாக்கம் மற்றும் மேற்கு தெரு போன்றவற்றுக்கு குடிநீர் குழாய் அமைக்க ரூ. 5 லட்சத்து 10 ஆயிரத்தில் டெண்டர் கோரப்பட்டு குறைந்த ஒப்பந்த புள்ளி கொடுத்தவருக்கு பணி உத்தரவு வழங்க மன்றத்தின் பார்வைக்கு ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.
அதேபோல் 15-வது நிதி குழு மானியத்தில் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் சுடுகாடு அருகில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் அறை கட்டுவதற்கு ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் செலவில் டெண்டர் கோரப்பட்டு குறைந்த ஒப்பந்த புள்ளி வந்ததற்கு ஒப்புதல் அளிக்கும் மற்றொரு தீர்மானம் வைக்கப்பட்டது.
மேலும் 15-வது நிதிக்குழு மானியத்தில் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் சித்தூர் சாலை பஸ் நிலையத்தில் உள்ள சமுதாய கூட்டத்திற்கு கழிவறை மற்றும் குளியலறை அமைத்து பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.4 லட்சம் டெண்டர் கோரப்பட்டு குறைந்த ஒப்பந்த புள்ளி கொடுத்தவருக்கு மன்றத்தின் ஒப்புதல் வழங்க தீர்மானம் வைக்கப்பட்டது.
இந்த தீர்மானங்களுக்கு பேரூராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், விஜயன், கபிலா சிரஞ்சீவி, குணசேகர் உள்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பணிகளை மேற்கொள்வதற்கு முன் கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்தி ஒப்புதல் பெற்ற பிறகு டெண்டர் விட்டிருக்க வேண்டும். ஆனால் எந்தவித தகவலும் தெரியப்படுத்தாமல் இந்த பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் வழங்குவதற்கு ஒப்புதல் கோருவது நியாயமற்றது என்று அவர்கள் தெரிவித்தனர்.
பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இத்தகைய முறையற்ற செயல்கள் பேரூராட்சி செயல் அலுவலரால் செய்யப்படுவதாகவும், அவர்கள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் சில வரவு செலவு பில்களை தயார் செய்து பணத்தை எடுத்துகொள்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த விவாதத்தின் போது கவுன்சிலர் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. கடந்த பேரூராட்சி தேர்தலின் போது வாக்குச்சாவடி மையங்களுக்கு விளக்குகள் ஒலிபெருக்கிகள் போன்றவற்றை அமைத்தவருக்கும் தேர்தலில் பணியாற்றியவர்களுக்கும் உணவு வழங்கியவருக்கும், சாமியானா பந்தல் அமைத்தவருக்கும் இதுநாள் வரை பணத்தை கொடுத்து முடிக்காமல் அவர்களை பேரூராட்சி செயல் அலுவலர் இழுத்தடித்து வருவதாகவும் கவுன்சிலர்கள் குற்றம் தட்டினார்கள். இந்த குற்றச்சாட்டுகளுக்கு செயல் அலுவலர் எவ்வித மறுப்பும் சொல்லாமல் அமைதி காத்தார். தங்களுக்கு இத்தகைய செயல் அலுவலர் தேவை இல்லை என்று அந்த கவுன்சிலர்கள் உரத்த குரலில் தெரிவித்தனர்.
பேரூராட்சி மன்றத்தில் நடைபெறும் தவறுகளுக்கு முதன்மை காரணம் செயல் அலுவலர்தான் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் மன்ற கூட்டம் சில மணி நேரம் தடைபட்டது. அதன் பிறகு அந்த நேரத்தில் இருந்த கவுன்சிலர்கள் இந்த தீர்மானங்களை ஆமோதித்து கையெழுத்து போட்டனர்.