மனு கொடுத்த உடனேயே மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய தென்காசி கலெக்டர்
மனு கொடுத்த உடனேயே மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை தென்காசி கலெக்டர் நிறைவேற்றினார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மொத்தம் 246 மனுக்கள் பெறப்பட்டன.
அப்போது வாசுதேவநல்லூர் இந்திரா காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கற்பகராணி தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்குமாறும், திருவேங்கடத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி அய்யாதுரை தனக்கு காது கேட்கும் கருவி வழங்குமாறும் கேட்டு மனு அளித்தனர். இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷிடம் கலெக்டர் ஆலோசனை செய்து, கற்பகராணிக்கு ரூ.13 ஆயிரத்து 500 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளும், அய்யாதுரைக்கு ரூ.8 ஆயிரத்து 500 மதிப்பிலான காது கேட்கும் கருவியும் உடனடியாக வழங்கினார்.
கூட்டத்தில் சங்கரன்கோவில் யூனியன் களப்பாகுளம் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் 9 பேர் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், களப்பாகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. கவுன்சிலர்கள் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு பஞ்சாயத்து தலைவர் செவி சாய்ப்பது இல்லை. இதனால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்து இருந்தனர்.