தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வேண்டுகோள்
`ஒலி மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்' என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வேண்டுகோள்
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டை போலவே இதே நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
எனவே பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகம் மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்து உள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளி கொண்டாடுமாறு தமிழக அரசு மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.