தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு கால் எலும்பு முறிவு-டாக்டர்களின் கவனக்குறைவால் ஏற்பட்டதாக பெற்றோர் புகார்
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. டாக்டர்களின் கவனக்குறைவால்தான் குழந்தைக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. டாக்டர்களின் கவனக்குறைவால்தான் குழந்தைக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
பிறந்த குழந்தையின் கால் எலும்பு முறிவு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவருடைய மனைவி மந்த்ரா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அங்கு இவருக்கு கடந்த 12-ந் தேதி அறுவை சிகிச்சையில் பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் அந்த பச்சிளம் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. இதுகுறித்து மருத்துவ ஊழியர்களிடம் மந்த்ரா தெரிவித்தபோது, குழந்தைக்கு எறும்பு கடித்திருக்கலாம் அல்லது பசியில் அழக்கூடும் என்று கூறினர்.
எனினும் தொடர்ந்து 10 நாட்களாக குழந்தை அழுததால் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது குழந்தையின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அழுது கொண்டே இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து குழந்தைக்கு மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பேச்சுவார்த்தை
இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் பிரசவிக்கப்பட்ட குழந்தையை 10 நாட்களாக சரிவர கவனிக்கவில்லை என்றும், இதனால் அந்த குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது என்றும் கூறி பெற்றோர், உறவினர்கள் திரண்டு வந்து மருத்துவ ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா, ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அரசு ஆஸ்பத்திரியில் ஊசி, மருந்துகளை வழங்காமல் வெளியே இருந்து வாங்கி வருமாறு மருத்துவ ஊழியர்கள் வற்புறுத்துவதாக குழந்தையின் தந்தை ஹரிகரன் கூறினார். இதுதொடர்பாக விசாரித்த இணை இயக்குனர், மருத்துவ ஊழியர்களைக் கண்டித்தார். மேலும் குழந்தைக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும், இன்னும் 10 நாட்களில் குழந்தையின் எலும்புகள் இணைந்து சரியாகி விடும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து குழந்தையின் உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது