தென்காசி குருத்திகாவின் தந்தை குஜராத்தில் கைது
தென்காசி குருத்திகாவின் தந்தையை குஜராத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கொட்டாகுளத்தைச் சேர்ந்தவர் வினித். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டு செங்கோட்டை பகுதியில் மர அறுவை மில் நடத்தி வந்த நவீன் பட்டேல் என்பவரது மகள் குருத்திகாவும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் வினித்தின் உறவினர் வீட்டில் இருந்தபோது, குருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல் மற்றும் 10-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்று வீடு புகுந்து குருத்திகாவை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சிலர் சரண் அடைந்தனர். சிலரின் ஜாமீன் மனுக்கள் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
நீண்ட காலமாக குருத்திகா எங்கு இருக்கிறார்? என்பது தெரியாமல் இருந்தது. இதற்கிடையே குருத்திகா தன்னை யாரும் கடத்தவில்லை என்று இருமுறை வீடியோ வெளியிட்டார். இது வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட குருத்திகா, அவரது விருப்பப்படி உறவினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இதற்கிடையே, குருத்திகாவிற்கு ஏற்கனவே திருமணம் செய்யப்பட்டதாக பெண் வீட்டார் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். இதுகுறித்து முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இவ்வாறாக பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்திய இந்த கடத்தல் வழக்கில் பெண்ணின் தந்தை நவீன் பட்டேல் சுமார் 3 மாத காலமாக தலைமறைவாக இருந்தார். அவரை நேற்று முன்தினம் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கால அவகாசம் பெற்று குற்றாலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்தனர்.
மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த குருத்திகாவையும் போலீசார் குற்றாலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரை மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.