தென்காசி காதல் திருமண விவகாரம்: தன்னிடம் குருத்திகாவை ஒப்படைக்கக்கோரி தாத்தா மனு -மதுரை ஐகோர்ட்டில் விசாரணை


தென்காசி காதல் திருமண விவகாரம்:  தன்னிடம் குருத்திகாவை ஒப்படைக்கக்கோரி தாத்தா மனு -மதுரை ஐகோர்ட்டில் விசாரணை
x

காதல் திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குருத்திகாவை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி அவருடைய தாத்தா மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதுகுறித்து விசாரணை நடந்தது.

மதுரை


காதல் திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குருத்திகாவை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி அவருடைய தாத்தா மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதுகுறித்து விசாரணை நடந்தது.

இளம்பெண் கடத்தல் விவகாரம்

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் (வயது 22) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த நவீன் படேல் மகள் குருத்திகாவும் (22) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அவர்கள் இருவரும் வினித்தின் உறவினர்கள் முன்னிலையில் நாகர்கோவிலில் திருமணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து நவீன் படேல் குற்றாலம் போலீசில் புகார் அளித்தார். அதுசம்பந்தமான விசாரணைக்கு ஆஜராகிவிட்டு சென்றபோது, வினித்தை தாக்கி, குருத்திகாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்திச்சென்றது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ஆட்கொணர்வு மனு

இதற்கிடையே தனது மனைவியை மீட்டு ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று வினித், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது, கடந்த 7-ந்தேதி குருத்திகாைவ போலீசார் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதிகள், அவரை காப்பகத்தில் தங்க வைத்து உரிய விசாரணை நடத்தி, அதுசம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என்று தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் சில நாட்களாக குருத்திகாவிடம் போலீசார் விசாரித்தனர். செங்கோட்டை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி, அவரிடம் ரகசிய வாக்குமூலமும் பெறப்பட்டது. அது தொடர்பான அறிக்கையை போலீசார் நேற்று முன்தினம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

தாத்தாவிடம் ஒப்படைக்க எதிர்ப்பு

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குருத்திகாவின் பெற்றோர் தலைமறைவாக இருப்பதால் அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குருத்திகாவின் தாத்தா மனு தாக்கல் செய்திருந்தார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசு வக்கீல் வாதிடுகையில், குருத்திகா மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் அவரை உறவினர்களிடம் ஒப்படைத்தால் விசாரணை பாதிக்கப்படும், என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணை நிலுவை சம்பந்தமான தகவல்களை அறிக்கையாக தகவல் செய்யும்படி தென்காசி போலீசாருக்கு உத்தரவிட்டு, இந்த ஆட்கொணர்வு மனுவை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story