தென்காசி வாலிபர் மர்மச்சாவு


தென்காசி வாலிபர் மர்மச்சாவு
x

கொடைக்கானலில் தென்காசி வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக அவருடன் தங்கி இருந்த பெண் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்

பிலிம் டெக்னாலஜி

தென்காசி சக்திநகரை சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 60). இவர், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவருடைய மகன் சூர்யா (வயது 30). பிலிம் டெக்னாலஜி படித்துள்ள இவர், கொடைக்கானலில் சொந்தமாக நிலம் வாங்கி காட்டேஜ் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதற்காக இவர் கடந்த 2 வருடங்களாக அவ்வப்போது கொடைக்கானலுக்கு வந்து சென்றார். கொடைக்கானலுக்கு வரும்போது சூர்யா, வழக்கமாக அங்குள்ள காட்டேஜில் தங்கி இருப்பது வழக்கம்.

அப்போது இவருக்கும், அதே பகுதியில் மற்றொரு காட்டேஜில் தங்கி இருந்த சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த பிரபுதாஸ் என்பவரின் மகள் சுவேதா என்ற கேரலின் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் கொடைக்கானல் கல்லுக்குழி மலோனிகுடில் என்னுமிடத்தில், கடந்த 9 மாதங்களாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

மர்மச்சாவு

இந்தநிலையில் சூர்யாவுக்கும், சுவேதாவுக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக சுவேதா, தனது ஆண் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சுவேதாவின் நண்பர்கள் 4 பேர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் தகராறை விலக்கி விட்டனர்.

அப்போது திடீரென வீட்டின் படியில் இருந்து சூர்யா தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் மயக்கம் அடைந்தார். இதனையடுத்து தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சூர்யாவை மீட்டு, கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சூர்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மர்மமான முறையில் சூர்யா இறந்ததாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கூடுதல் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி ஆகியோர் கொடைக்கானலுக்கு விரைந்தனர். மேலும் சுவேதா மற்றும் அவரது ஆண் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். சூர்யாவின் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் கூறுகையில், இறந்த சூர்யா தலையின் இடதுபுறத்தில் ரத்தக்காயம் உள்ளது. இடது கண், நெற்றி, உதடு ஆகிய இடங்களில் காயங்களும், வலது கையில் வெந்து போன காயமும், இடது பக்க கழுத்தில் நகக்கீரல் இருப்பதும் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மர்மச்சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கிறோம். பிரேத பரிசோதனையின் முடிவில் சூர்யா இறப்புக்கான காரணம் தெரியவரும். அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கொடைக்கானலில் தங்கி இருந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story