சென்னை வந்த தென்மாவட்ட ரெயில்கள் 5 மணிநேரம் தாமதம்


சென்னை வந்த தென்மாவட்ட ரெயில்கள் 5 மணிநேரம் தாமதம்
x

திருச்சியில் தண்டவாளம் மறுசீரமைப்புப்பணிகள் நடைபெற்று வருவதால் தென்மாவட்ட ரெயில்கள் 5 மணிநேரம் தாமதமாக சென்னை வந்தடைந்தன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னை,

சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, தென் மாவட்டத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தினமும் பயணித்து வருகின்றனர். அதிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நிற்கக்கூட முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.

இதற்கிடையே, திருச்சி ரெயில்நிலையத்தில் தண்டவாள மறுசீரமைப்பு பணி கடந்த 20-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் திருச்சியிலிருந்து இயக்கப்படும் சில ரெயில்கள் பகுதியாகவும், முழுமையாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன.

இந்தநிலையில், திருச்சியை ஒட்டிய பொன்மலை ரெயில்நிலையத்திலும், மதுரைக்கு செல்லக்கூடிய பிரிவு பாதையிலும் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) சில முக்கியமான பணிகள் நடைபெற்றது. அப்போது அந்த வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருந்த அனைத்து ரெயில்களும் பல மணிநேரமாக வழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. பாதை சீரமைக்கும் வரை ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் இரவில் தூக்கமின்றி மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். அதிகாலை 4 மணிக்கு மேல் ஒவ்வொரு ரெயிலாக புறப்பட்டுச்சென்றது.

தாமதமாக வந்தது

சென்னை எழும்பூருக்கு அதிகாலை 5 மணிக்கு வரவேண்டிய ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் காலை 8.30 மணிக்கு வந்தது. மேலும், நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை, முத்துநகர், அனந்தபுாி, செந்தூர் எக்ஸ்பிரஸ் போன்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 6 மணி முதல் 8 மணிக்குள் வந்து சேர்ந்துவிடும். ஆனால் தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் காரணமாக ரெயில்கள் 4 மணி முதல் 5 மணி நேரம் வரையிலும் தாமதமாக வெவ்வேறு நேரங்களில் எழும்பூரை வந்தடைந்தன. தென்மாவட்ட ரெயில்கள் வருவதற்கு தாமதம் ஆனதால் தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் ரெயில்களும் தாமதமடைந்தன.

பயணிகள் அவதி

இதனால் விடுமுறை நாளில் சொந்த ஊர் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு நேற்று மீண்டும் பணிக்கு திரும்புவதற்காக ரெயிலில் வந்தவர்கள் பணிக்கு செல்லமுடியாமல் தவித்தனர். மேலும் ரெயிலில் பயணித்த குழந்தைகள், வயதானோர் என அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். இதனால், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து செல்வதற்காக சென்னை எழும்பூர் ரெயில்நிலையத்துக்கு வந்திருந்தவர்களும், பல மணிநேரம் காத்துக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதேபோல, திருச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால் ரெயில்கள் வருவதற்கு தாமதம் ஏற்படும். இதனால் சென்னையிலிருந்து புறப்படும் ரெயில்கள் இன்று தென்மாவட்டத்திற்கு தாமதமாகச்சென்றடையும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story