திருச்செந்தூரில் பதற்றம்: இருதரப்பினர் இடையே மோதல்; பெட்ரோல் குண்டு - கற்கள் வீச்சு


திருச்செந்தூரில் பதற்றம்: இருதரப்பினர் இடையே மோதல்; பெட்ரோல் குண்டு - கற்கள் வீச்சு
x

திருச்செந்தூரில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு, கற்கள் வீசப்பட்டன. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் கரம்பவிளையில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த 9-ந் தேதி நடந்தது. மறுநாள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின்போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரையும் போலீசார் அழைத்து பேசினர். இதில் இரு தரப்பினரும் சமாதானமாகி சென்றனர்.

இதைத்தொடர்ந்து கரம்பவிளை கோவிலில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள சிறுவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மாட்டு கொட்டகையில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் அந்த கொட்டகையில் தீப்பிடித்து வேகமாக பரவியது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

மீண்டும் மோதல்

இதன்பிறகு முன்விரோதம் காரணமாக மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.

இதில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், திருச்செந்தூர் மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மேரி, போலீஸ்காரர்கள் பால்பாண்டி, ஆனந்த பேச்சி, வால்டர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வீடுகள் சேதம்

இந்த மோதலில் போலீஸ் ஜீப்பின் பின்பக்க கண்ணாடி, 4 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள், சில வீடுகள் சேதமடைந்தன.

தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் கரம்பவிளை மற்றும் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story