தேனி அருகே பரபரப்பு: 100 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தை
தேனி அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையை தீயணைப்பு படையினர் 3½ மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர்.
கிணற்றுக்குள் சிறுத்தை
தேனி அருகே பூதிப்புரம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இந்த ஊரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் மலையடிவாரத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பு வழியாக விவசாயிகள் சிலர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த தோப்பில் உள்ள ஒரு கிணற்றுக்குள் இருந்து வினோதமான சத்தம் கேட்டது.
இதனால் அதன் அருகில் சென்ற விவசாயிகள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர். அப்போது அங்கு சிறுத்தை தண்ணீருக்குள் தத்தளித்தபடி உருமிக் கொண்டு இருந்ததை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் விவசாயிகள் தகவல் கொடுத்தனர்.
மீட்பு பணி
தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார் தலைமையில், தேனி நிலைய அலுவலர் பழனி மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். வனத்துறையினரும் அங்கு வந்தனர். அந்த கிணறு சுமார் 100 அடி ஆழம் கொண்டது. கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை அங்கிருந்த ஒரு கம்பியை தொற்றிக் கொண்டு இருந்தது.
சிறுத்தையை மீட்கும் போது மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் மீட்பு பணிகள் குறித்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்து பேசினர். பின்னர், கயிறு ஏணியை கிணற்றுக்குள் இறக்கினர். அந்த கயிறு ஏணியை பிடித்து சிறுத்தை மேலே ஏறி தப்பிச் செல்லட்டும் என்ற நோக்கத்தில் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிறுத்தை அந்த ஏணியில் ஏறவில்லை. இதனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
பாய்ந்து ஓடியது
பின்னர் கிணற்றுக்குள் வலையை வீசி சிறுத்தையை தீயணைப்பு படையினர் பிடித்தனர். அதை மெதுவாக மேலே தூக்கினர். அப்போது அவர்களை அச்சுறுத்தும் வகையில் சிறுத்தை சத்தம் எழுப்பியது. பாதி கிணறு தூக்கிய நிலையில், பாதுகாப்பு கருதி அனைவரும் அவர்கள் வந்த வாகனங்களுக்குள் ஏறி பதுங்கி கொண்டனர்.
பின்னர் வாகனங்களில் இருந்தபடி வலையோடு இணைக்கப்பட்டு இருந்த கயிறை மேலே தூக்கினர். வலை கிணற்றின் மேலே வந்த போது அதற்குள் இருந்த சிறுத்தை லாவகமாக வெளியே பாய்ந்தது. பின்னர் மின்னல் வேகத்தில் அது மலைப்பகுதியை நோக்கி ஓடியது. இதனால் மீட்பு குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பரபரப்பு
இந்த மீட்பு பணி மாலை 5.30 மணி வரை நடந்தது. சுமார் 3½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுத்தை மீட்கப்பட்டது. மீட்பு குழுவினருக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார் பாராட்டு தெரிவித்தார்.
இந்த சிறுத்தைக்கு 2 வயது இருக்கும் என்றும், தண்ணீர் தேடியோ அல்லது ஏதாவது விலங்கை வேட்டையாடுவதற்காக துரத்தி வந்தபோதோ கிணற்றுக்குள் தவறி விழுந்து இருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே சிறுத்தையை வேடிக்கை பார்க்க மக்கள் வந்த போது, சிறுத்தை விழுந்த தோட்டத்துக்குள் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேடிக்கை பார்க்க வந்த மக்களை வனத்துறையினர் திருப்பி அனுப்பினர்.