ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது:தாட்கோ பெண் மேலாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்


ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது:தாட்கோ பெண் மேலாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
x
சேலம்

சேலம்

சேலத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட தாட்கோ பெண் மேலாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.15 ஆயிரம் லஞ்சம்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே மணியார் குண்டம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). விவசாயி. இவர், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டருக்கு மானியம் வேண்டி சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இதையடுத்து ரூ.7.50 லட்சம் மதிப்பிலான டிராக்டருக்கு 50 சதவீதம் மானியம் வழங்குவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று குமாரிடம் தாட்கோ மேலாளர் (பொறுப்பு) ஜி.சாந்தி கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். பின்னர் அவர்களது ஆலோசனையின்பேரில் கடந்த 15-ந் தேதி தாட்கோ அலுவலகத்திற்கு விவசாயி குமார் சென்றார்.

இதையடுத்து அங்கிருந்த தாட்கோ மேலாளர் ஜி.சாந்தியிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுக்க முயன்றபோது, அதை அலுவலக உதவியாளர் எம்.சாந்தியிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

பணியிடை நீக்கம்

இதைத்தொடர்ந்து அவரிடம் குமார் லஞ்ச பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், லஞ்சம் வாங்கி கைதான தாட்கோ பெண் மேலாளர் ஜி.சாந்தி மற்றும் அலுவலக உதவியாளர் எம்.சாந்தி ஆகிய 2 பேரையும் நேற்று பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story