பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே கணவர் கொலை வழக்கில் கைதான பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே கணவர் கொலை வழக்கில் கைதான பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

6 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). முன்னாள் போலீஸ் ஏட்டு. இவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய வழக்கில் அவரது மனைவியான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, மகன் ஜெகதீஷ்குமார், மனைவியின் கள்ளக்காதலன் கமல்ராஜ், பெண் சாமியார் சரோஜா, கூலிப்படையை சேர்ந்த ராஜபாண்டியன், விஜயகுமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் மகன் ஜெகதீஷ்குமார், கமல்ராஜ் ஆகிய 2 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மற்ற 4 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கோர்ட்டில் சரண் அடைந்த கமல்ராஜை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது, சென்னகிருஷ்ணன் என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

பணியிடை நீக்கம்

இதையடுத்து தலைமறைவாக இருந்த பாவக்கல்லை சேர்ந்த சென்னகிருஷ்ணன் (30) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் போலீஸ் ஏட்டு கொலைக்கு உதவியதாக சென்னகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரின் உடலை காரில் எடுத்து செல்ல உதவியது. வீட்டில் இருந்த ரத்த கறைகளை அழித்தது போன்றவற்றை சென்னகிருஷ்ணன் செய்துள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில் கணவர் கொலை வழக்கில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ராவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். இந்த கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த வெள்ளைச்சாமி, செங்குட்டுவன் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story