திருமண மண்டபத்தில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்; 10 பேர் காயம்
நாகர்கோவிலில் உற்சாக மிகுதியால் குத்தாட்டம் போட்டதால் திருமண மண்டபத்தில் இருவீட்டாரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 10 பேர் காயம் அடைந்தனர். அப்போது மயங்கி விழுந்த மணமகளை மணமகன் தோளில் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உற்சாக மிகுதியால் குத்தாட்டம் போட்டதால் திருமண மண்டபத்தில் இருவீட்டாரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 10 பேர் காயம் அடைந்தனர். அப்போது மயங்கி விழுந்த மணமகளை மணமகன் தோளில் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குத்தாட்டம் போட்டதால் மோதல்
நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த மணமகனுக்கும், ராஜாக்கமங்கலம்துறை பகுதியை சேர்ந்த மணமகளுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. பிறகு அதே மண்டபத்தில் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது மணமகள் வீட்டாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் மது போதையில் குத்தாட்டம் ஆடினார்கள். அந்தநேரத்தில் உற்சாக மிகுதியில் அங்கு நின்றிருந்த மணமகனின் உறவுக்கார பெண்கள் மீது அவர்கள் விழுந்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் வீட்டார் குத்தாட்டத்தை நிறுத்தும்படி பெண் வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பயங்கர மோதலாக மாறியது.
ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதோடு திருமண மண்டபத்தின் ஜன்னல் கண்ணாடி மற்றும் நாற்காலிகளையும் சேதப்படுத்தினர். ஆங்காங்கே இருந்த பொருட்களை தூக்கி வீசி மாறி மாறி அடித்துக் கொண்டனர். இதனால் திருமண மண்டபம் போர்க்களமாக மாறியது.
மயங்கி விழுந்த மணமகள்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்தனர். அதன்பிறகு தான் அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழல் முடிவுக்கு வந்தது.
இதற்கிடையே இரு வீட்டாரது உறவினர்களும் மோதலில் ஈடுபடுவதை பார்த்த மணப்பெண் அதிர்ச்சியில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் உடனே மணமகளை தன் தோளில் சுமந்து சென்று அருகே இருந்த ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். மேலும் மோதலில் 6 பெண்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருமண நிகழ்ச்சியில் இருவீட்டாரிடையே திடீரென மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து இதுவரை யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. அதேநேரம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே திருமண மண்டபத்தில் நடந்த மோதல் விவகாரத்தில் மணப்பெண் மயங்கி விழுந்ததும், அவரை மணமகன் தூக்கிச்செல்லும் காட்சிகள் கொண்ட வீடியோவும் சமூக வைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.